டிரம்ப் - நெதன்யாகு நேரில் சந்திப்பு - ஈரான் போர், அணுசக்தி விவகாரங்கள் குறித்து ஆலோசனை!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையேயான முக்கியச் சந்திப்பு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தின. அதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்து, ஹர்முஸ் ஜலசந்திப் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிகள் உருவாயின. தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, ஜூலை 26 முதல் இரு தரப்பிலும் எவ்விதத் தாக்குதல்களும் நடத்தப்படாமல் தற்காலிகச் சூழல் நிலவி வருகிறது.
வெள்ளை மாளிகையின் 'ஓவல் அலுவலகத்தில்' சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மூடிய கதவுகளுக்குப் பின்னாலான பேச்சுவார்த்தையில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். ஈரான் எக்காரணத்தைக் கொண்டும் அணுஆயுதத்தைப் பெறக் கூடாது என்பதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒத்த கருத்துடன் இருப்பதாக இரு தலைவர்களும் உறுதியளித்தனர். ஈரானின் 'பிக்காக்ஸ் மவுண்டன்' அணுசக்தி மையம் குறித்த உளவுத் தகவல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
லெபனான் உடனான ஒப்பந்தத்தை அமல்படுத்துதல், காசா அமைதிச் சூழல் மற்றும் 'ஆபிரகாம் உடன்படிக்கையை' விரிவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஈரான் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே லேசான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், இந்தச் சந்திப்பு இரு நாடுகளின் பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்த உதவும் எனக் கருதப்படுகிறது.
டொனால்டு டிரம்ப்: சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், இந்தச் சந்திப்பு மிகவும் "நேர்மறையானதாகவும் பயனுள்ளதாகவும்" அமைந்தது எனத் தெரிவித்தார்.
"அதிபர் டிரம்ப் உடனான இச்சந்திப்பு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்குத் தேவையான முக்கிய முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது" எனத் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.