ஈரான் இப்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பது "too late" - டிரம்ப்
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானின் தற்போதைய நிலை குறித்து அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழலில், கடந்த நான்கு நாட்களாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
ஈரானின் பாதுகாப்பு அமைப்புகள், விமானப்படை, கடற்படை மற்றும் அந்நாட்டின் தலைமைத்துவம் ஆகியவை முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டன. நான்கு நாட்களாகத் தொடரும் கடும் தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் இப்போது போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
"ஈரான் இப்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பது மிகவும் தாமதமானது. அதற்கான காலம் கடந்துவிட்டது" என்று டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணு ஆயுதத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதலைத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் அண்டை நாடுகளான சவுதி அரேபியா, யுஏஇ, பஹ்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதற்குக் கூடுதல் பதிலடியாகவே தற்போது ஈரானின் முக்கிய ராணுவக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானின் ராணுவத் தளங்கள் மற்றும் கடற்படைப் பிரிவுகள் பெருமளவில் செயலிழந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. முன்னதாக டிரம்ப் விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை ஈரான் ஏற்க மறுத்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.