ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல் - புதிய சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்!

 

ரஷ்யா மற்றும் ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷியா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ என்ற இந்த புதிய சட்டத்தின் மூலம், ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியாவிற்கு அழுத்தம் கொடுத்து போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியப் பொருட்களுக்கு உடனடியாக 100 சதவீத வரி விதிக்கப்பட்டதாக அர்த்தமில்லை; அதற்கான அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் எரிசக்தியை அதிக அளவில் வாங்கிவரும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முதன்மையாக இருப்பதால், இந்தச் சட்டம் இவ்விரு நாடுகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ரஷிய அதிகாரிகள், வங்கிகள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்கு எதிரான தடைகளை நீட்டிப்பதுடன், ரஷியாவின் எரிசக்தி வர்த்தகம் மற்றும் வர்த்தகத் தடைகளைத் தவிர்க்க உதவும் கப்பல் அமைப்புகளுக்கும் இந்தச் சட்டம் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும். மேலும், ஈரான் மீது ஏற்கனவே உள்ள பொருளாதாரத் தடைகளை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் விதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.