"ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்த சாத்தியக்கூறுகள் உண்டு" - ட்ரம்ப் எச்சரிக்கை!

 

அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, ஈரானுக்கு எதிராக மீண்டும் கடுமையான ராணுவத் தாக்குதல்களைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள சர்வதேச வணிகத்திற்கு மிக முக்கியப் பாதையான ஹார்மூஸ் ஜலசந்தியில், வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின. இதன் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாகவும், கடல்வழி வர்த்தகத்தைப் பாதுகாப்பதாகவும் கூறி, அமெரிக்கா தனது விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அப்பகுதியில் அதிவிரைவாகக் குவித்து வருகிறது. அதேவேளையில், அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலைக் கருத்தில் கொண்டு எண்ணெய் விலையை உயர்த்த ஈரான் திட்டமிட்டுச் சில சம்பவங்களைச் சித்தரிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையை மிக விரைவாக முடிக்கவும் முடியும் அல்லது தகுந்த பாடம் புகட்ட மீண்டும் வலுவான தாக்குதல்களை நடத்தவும் சாத்தியக்கூறுகள் உண்டு" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள ஈரான் அரசு, "அமெரிக்கா உடனடியாகத் தன் ராணுவக் தடைகளை விலக்கி கொள்ள வேண்டும். தங்கள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பன்மடங்கு வீரியத்துடன் ஈரான் பதிலடி கொடுக்கும்" எனத் தெரிவித்துள்ளதோடு, தங்களது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமாகும் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.