“ட்ரம்ப்பின் 20% கட்டண அறிவிப்பு மிக அதிகம் - நாங்களே நேர்மையாக இருப்போம்” - ஈரான் வெளியுறவு அமைச்சர்!
ஹார்மூஸ் ஜலசந்தி கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டண விதிப்பு மிக அதிகம் என்றும், இந்த விவகாரத்தில் தாங்கள் நேர்மையாக நடந்து கொள்வோம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஊழியர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் தங்களது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. அண்மையில் வர்த்தகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பொறுப்பேற்கச் செய்யும் வகையிலும், ஈரானியப் படைகளின் பாதுகாப்புத் திறனைக் குறைக்கும் வகையிலும் அமெரிக்கப் பாதுகாப்புப் படைத் தளபதியின் உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்பரபரப்பான சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தியை மீண்டும் அமெரிக்கக் கடற்படை முற்றுகையிடும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், இப்பகுதியைக் கடந்து செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
டிரம்ப்பின் இந்த அறிவிப்பு குறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்து முற்றிலும் சரியானதுதான். ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கான சேவையை வழங்குவதற்காகக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஹார்மூஸ் ஜலசந்தியின் உண்மையான பாதுகாவலனாக எப்போதும் ஈரான் இருந்து வருகிறது; இனியும் அப்படியே தொடரும். ஆனால், டிரம்ப் அறிவித்துள்ள 20 சதவீதக் கட்டணம் என்பது மிக அதிகமாகும். நாங்கள் இந்த விவகாரத்தில் நேர்மையாகச் செயல்படுவோம்."
ஈரான் வெளியுறவு அமைச்சரின் இந்த விளக்கத்தின் மூலம், உலக வர்த்தகத்தில் மிக முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கும் தீவிர முடிவில் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுமே களமிறங்கியுள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் இப்பகுதியில் சர்வதேச வர்த்தகக் கப்பல்களுக்கான பாதுகாப்புச் சூழல் மேலும் சிக்கலாகியுள்ளது.