சுனாமி எச்சரிக்கை... ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் 7.1 ஆக பதிவு!
ஜப்பானின் க்யூஷூ தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, உள்ளூர் நேரப்படி மாலை 4:27 மணிக்கு தரைமட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஜப்பானிய நில அதிர்வு அளவுகோலில் இது மிக உச்சபட்ச அளவான 7 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அரியாக்கே மற்றும் யாட்சுஷிரோ கடல் பகுதிகளுக்கு 1 மீட்டர் (3 அடி) உயரத்திற்குச் சுனாமி அலைகள் எழக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறும், கடற்கரை பக்கமாகச் செல்ல வேண்டாம் என்றும் ஜப்பான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நிலநடுக்கத்தின் வீரியத்தால் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. பீதியடைந்த மக்கள் உடனடியாக வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறிச் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
பாதுகாப்பு சோதனைகளுக்காகக் க்யூஷூ பகுதியில் இயங்கும் 'ஷின்கான்சென்' அதிவேகப் புல்லட் ரயில்கள் மற்றும் உள்ளூர் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் குமாமோட்டோ விமான நிலையத்தின் ஓடுதளமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சுமார் 48,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள அணுமின் நிலையங்களில் வழக்கத்திற்கு மாறான எந்தச் பாதிப்பும் ஏற்படவில்லை என அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் மற்றும் மீட்புப் படையினர் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.