"தங்க முலாம் பூசப்பட்ட தகரம் தான் ஆளுநர் உரை" - டிடிவி தினகரன்!
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக 17-வது சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வு, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், புதிய தவெக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் கொள்கை உரை குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றின் மூலம் தனது கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளார்.
புதிய அரசின் ஆளுநர் உரை என்பது வெற்று விளம்பரக் கவர்ச்சியைக் கொண்டது என்றும், "தங்க முலாம் பூசப்பட்ட தகரம்" போல அது காட்சி அளிக்கிறது என்றும் அவர் சாடியுள்ளார். தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பல்வேறு கவர்ச்சிகரமான நலத்திட்டங்கள் குறித்து ஆளுநர் உரையில் எந்தவொரு தெளிவான செயல்திட்டமும் இல்லை என டிடிவி தினகரன் சுட்டிக்காட்டினார்:
"குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கும் மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கும் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம், தாலிக்குத் தங்கமும் பட்டுச்சேலையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டம், பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் எனத் தவெக தனது தேர்தல் அறிக்கையில் அள்ளிவீசிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றுவதற்கான உத்திரவாதமோ அல்லது நிதி ஒதுக்கீட்டுச் செயல்திட்டமோ ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை. இது ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது."
மாநிலத்தின் நிதிநிலையைச் சீரமைத்த பிறகே தங்களின் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனத் தவெக அரசு கூறுவதை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், பின்வருமாறு கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன்பாகவே தமிழ்நாட்டின் உண்மையான நிதிப் பற்றாக்குறையும், கடன் சுமையும் எவ்வளவு என்பது தவெகவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அவ்வாறு தெரிந்திருந்தும், தேர்தலின் போது மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளைத் தவெக அள்ளிவீசியதா?
வழக்கமான 'Cut, Copy, Paste' நடவடிக்கை: உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குதல், கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருதல், நதிகள் இணைப்பு போன்ற முக்கிய மாநில உரிமைகளுக்கு எவ்வித முயற்சியும் எடுக்காமல், கடந்த கால ஆளுநர் உரைகளில் இருந்த விவரங்களை அப்படியே 'Cut, Copy, Paste' செய்து சம்பிரதாயமாக வாசித்துள்ளனர். மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்துள்ள குற்றச் சம்பவங்களையும், அரசின் வாதங்களையும் ஒப்பிட்டு அவர் விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் கொத்துக் கொத்தாக அரங்கேறும் கொலைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுமே தவெகவின் கடந்த ஒரு மாத கால ஆட்சியின் அடையாளமாக மாறியுள்ளது. இத்தகைய மோசமான சூழல் நிலவும் போது, "பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்" என ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருப்பது ஒரு கேலிக்கூத்தாகும் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டத் துடிக்கும் கர்நாடக அரசையோ அல்லது முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகச் செயல்படும் கேரள அரசையோ கண்டிக்கக் கூடத் தவெக அரசு அஞ்சுவதாகவும், கூட்டணி நாற்காலியைத் தாங்கிப் பிடிக்கும் காங்கிரஸ் விசுவாசத்திற்காகத் தமிழக விவசாயிகளின் நலனை இந்த அரசு காவு கொடுத்துவிட்டதாகவும் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.