மேலூரில் இழுபறி? மாணிக்கம் தாகூர் vs கார்த்தி சிதம்பரம் - மாமனாருக்காக விடாப்பிடியாக நிற்கும் எம்.பி!

 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குப் புதுச்சேரி நீங்கலாகத் தமிழகத்தில் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மேலூர் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாதது அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலூர் தொகுதியைக் கைப்பற்றக் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தனது மாமனார் ராஜேந்திரனுக்கு மேலூர் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவுடன் மற்றொரு தரப்பினர் இந்தத் தொகுதியைக் கோரி வருகின்றனர். இதனால் டெல்லி மேலிடம் யாருக்குப் பச்சைக்கொடி காட்டும் என்பதில் இழுபறி நீடிக்கிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது.

மற்ற 27 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரசார வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில், மேலூரில் மட்டும் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் தொண்டர்கள் தவித்து வருகின்றனர். தொகுதிக்காக உழைத்த உள்ளூர் நிர்வாகிகளை விடுத்து, மேலிடத் செல்வாக்கு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறி ஒரு தரப்புக் காங்கிரஸ் கட்சியினர் (கதர்கள்) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ள தொகுதிகளில் மேலூரும் ஒன்று. இங்கு நிலவும் இந்த உட்கட்சிப் பூசல், திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமோ என்ற அச்சம் கூட்டணிக் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் மேலிடம் இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.