துருக்கியில் திடீர் நிலநடுக்கம்! 😱 5.1 ரிக்டர் அதிர்வு.. பீதியில் வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்

 

 

துருக்கியின் கிழக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கட்டிடங்கள் குலுங்கியதைத் தொடர்ந்து பலர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையமான EMSC-யின் புதுப்பிக்கப்பட்ட தகவலின்படி, கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை சுமார் 10.41 மணியளவில் பதிவானதாக EMSC தரவுகள் தெரிவிக்கின்றன. ஷான்லியுர்ஃபா நகருக்கு வடக்கே சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் பலர் பீதியடைந்தனர். கட்டிடங்கள் குலுங்கியதால் முன்னெச்சரிக்கையாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் அல்லது குறிப்பிடத்தக்க பொருட்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. சவுதி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலிலும் உடனடி உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து தகவல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப அறிக்கைகளில் நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக EMSC தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் புதுப்பிக்கப்பட்ட EMSC தரவுகளில் அளவு 5.3 ரிக்டர் என்றும், ஆழம் 7 கிலோமீட்டர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக ஏதேனும் அதிர்வுகள் ஏற்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.