புதிய உச்சம் தொட்ட மஞ்சள் விலை; குவிண்டால் ரூ.24,211-க்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி!

 

ஈரோடு மஞ்சள் சந்தைகளில் வரத்து குறைவு மற்றும் பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பு காரணமாக மஞ்சள் விலை கணிசமாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் மஞ்சள் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்னிந்தியாவின் மிக முக்கிய மஞ்சள் வர்த்தக மையமாக விளங்கும் ஈரோட்டில், கடந்த சில வாரங்களாகவே மஞ்சள் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.19,851-க்கு விற்பனையான நிலையில், அடுத்த சில நாட்களிலேயே குவிண்டால் ரூ.22,999 என்ற அளவிற்கு உயர்ந்தது. இந்நிலையில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உள்நாட்டு மற்றும் வெளிமாநில வியாபாரிகளின் தேவை அதிகரித்திருப்பதால், நேற்று ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் செம்மாம்பாளையம் சந்தைகளில் மஞ்சள் விலை மேலும் உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, விரலி மஞ்சள் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.24,211 வரையிலும், கிழங்கு மஞ்சள் அதிகபட்சமாக ரூ.21,577 வரையிலும் ஏலம் போனது.

சந்தைக்கு மஞ்சள் மூட்டைகளின் வரத்து குறைவாக இருப்பதும், அதே சமயம் பண்டிகைக் கால விற்பனைக்காக வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு மஞ்சளைக் கொள்முதல் செய்வதுமே இந்த அதிரடி விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக உரிய விலை கிடைக்காமல் தவித்து வந்த ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மஞ்சள் விவசாயிகளுக்கு, இந்த விலை உயர்வு மிகுந்த லாபத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. வரும் நாட்களிலும் மஞ்சள் விலை இதே போல் ஏறுமுகத்தில் இருக்கும் என வியாபாரிகள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.