மோடிக்கும், எனக்கும் மனைவி தொல்லைகள் இல்லை... நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கலகலப்பு!
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சபையில் நகைச்சுவையை அள்ளி வீசினார். ஒவ்வொரு ஆணின் வாழ்விலும் தாய், சகோதரி எனப் பெண்களின் தாக்கம் அதிகம் என்று குறிப்பிட்ட அவர், அந்தப் பட்டியலில் 'மனைவி' என்ற வார்த்தையைச் சேர்த்தார். அப்போது ஒரு நக்கலான புன்னகையுடன், தனக்கும் பிரதமர் மோடிக்கும் "மனைவிப் பிரச்சினை இல்லை" என்று அவர் கூறியது மக்களவையில் பெரும் சிரிப்பொலியை ஏற்படுத்தியது.
சபையில் சிரிப்பலைகள் ஒருபுறம் இருந்தாலும், மகளிர் இட ஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதற்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தேர்தல் களத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற அரசாங்கம் செய்யும் திட்டமிட்ட முயற்சி என்று அவர் குற்றம் சாட்டினார். 2023-இல் நிறைவேற்றப்பட்ட மசோதாவே உண்மையானது என்றும், தற்போதைய திருத்தங்கள் அரசியல் எல்லைகளை மாற்றும் நோக்கம் கொண்டவை என்றும் அவர் வாதிட்டார். 2029-ஆம் ஆண்டு அமலாக்கம் என்ற காலதாமதத்தைத் தவிர்த்து, உடனடியாக இதனைச் செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.