வீட்டில் இருக்க பிடிக்கல...  ஆமையின் ‘மெதுவான எஸ்கேப்’! வைரலாகும் வீடியோ

 

 

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட 45 கிலோ எடையுள்ள ராட்சத ஆமை ஒன்று வேலி வழியாக வெளியேறி, சாலையில் மெதுவாகச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.கொலராடோ மாகாணம் டென்வர் நகருக்கு தெற்கே உள்ள லிட்டில்டன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ‘லார்ட்’ என்ற பெயரில் ஆப்பிரிக்க சுல்காடா வகை ஆமையை வளர்த்து வந்துள்ளார். சுமார் 100 பவுண்டு, அதாவது 45 கிலோ எடையுள்ள இந்த ஆமை, கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வீட்டின் வேலி இடுக்கின் வழியாக வெளியேறியுள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய ஆமை, சாலையை நோக்கி மெதுவாக நகர்ந்துள்ளது. அதன் வேகம் மிகவும் குறைவாக இருந்ததால், அப்பகுதி மக்கள் ஆமையை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜெபர்சன் கவுண்டி போலீசார் மற்றும் விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆமையின் உரிமையாளரும் அங்கு வந்து, மீண்டும் வீட்டுக்குள் செல்லுமாறு ஆமையை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.

ஆனால், ஆமை அதற்கு செவி சாய்க்காமல் எதிர்திசையில் தொடர்ந்து நகர முயன்றதாக அதிகாரிகள் நகைச்சுவையாக தெரிவித்துள்ளனர். இறுதியில் ஆமையின் அதிக எடை காரணமாக, ஒருவரால் மட்டும் அதை தூக்க முடியாத நிலையில், பொதுமக்களின் உதவியுடன் அதிகாரிகள் ஆமையை தூக்கி மீண்டும் அதன் வீட்டுத் தோட்டத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்.இந்த வித்தியாசமான ‘எஸ்கேப்’ சம்பவத்தின் பாடிகேம் வீடியோவை போலீசார் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மிக மெதுவாக நகர்ந்தாலும் வீட்டில் இருந்து வெளியேற முயன்ற 45 கிலோ ஆமையின் காட்சிகள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.