விஜய்க்காக தீக்குளித்த த.வெ.க. நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

 

கன்னியாகுமரி மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர் அணியின் இணை அமைப்பாளராகப் பணியாற்றி வந்த இசக்கியப்பன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். கடந்த 9-ம் தேதி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு அவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீ விபத்தில் படுகாயமடைந்த இசக்கியப்பனை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், 80 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் இருந்ததால், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

முதலமைச்சர் விஜய் மீதான அதீத பற்றால் தனது உயிரையே மாய்த்துக்கொண்ட நிர்வாகியின் மரணம், த.வெ.க. தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ஆர்வமும், கட்சிப் பணியும் உயிரைப் பறிக்கும் நிலைக்குச் செல்லக்கூடாது எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இசக்கியப்பனின் மறைவுக்குத் த.வெ.க. முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.