கம்பம் தொகுதியில் வேட்பாளரை மாற்றச் சொல்லி தவெக தொண்டர்கள் போராட்டம்!  

 

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியான சில மணி நேரங்களிலேயே, தேனி மாவட்டத்தில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. கம்பம் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை மாற்றக் கோரி இன்று காலை முதல் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சியின் அடிமட்டப் பணிகளில் ஈடுபட்டு, கிளை மற்றும் வார்டு வாரியாகக் கட்சியைப் பலப்படுத்திய முக்கிய நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனத் தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கம்பம் தொகுதிக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஜெகநாத் மிஸ்ரா, தொகுதி மக்களுக்குப் பரிச்சயம் இல்லாதவர் என்றும், கட்சிப் பணிகளில் தீவிரமாகப் பங்கெடுக்காத அவருக்கு வாய்ப்பு வழங்கியது தவறு என்றும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

கம்பம் மண்ணைச் சேர்ந்த, கட்சியின் விசுவாசமிக்க ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதே இவர்களது பிரதான கோரிக்கையாக உள்ளது.

"தலைவர் விஜய் மீது எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. ஆனால், வேட்பாளர் தேர்வில் யாரோ தவறான தகவல்களை அவருக்கு வழங்கியுள்ளனர். கம்பம் தொகுதியை வெல்ல வேண்டுமானால், மக்கள் செல்வாக்குள்ள ஒருவரைத் தலைவர் களம் இறக்க வேண்டும்" எனப் போராட்டக் குழுவின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கம்பம் நகரின் முக்கியப் பகுதிகளில் திரண்ட தவெக தொண்டர்கள், வேட்பாளர் மாற்றத்தைக் கோரி கோஷங்களை எழுப்பினர். சில இடங்களில் கட்சி பேனர்களைத் தலைகீழாகக் கட்டித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்தத் திடீர் போராட்டத்தால் கம்பம் தொகுதியில் தவெக-வின் பிரசாரப் பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.