மாதம் ஒருமுறை மின் கட்டணம்... தவெக தேர்தல் அறிக்கை!

 

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் பொதுமக்களுக்குப் பெரும் சுமையைக் குறைக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள 2 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படும் என்ற முக்கிய வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர்கள் தங்கள் மின் பயன்பாட்டைக் குறைக்கவும், அதிகப்படியான கட்டணத்தைத் தவிர்க்கவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் சூரியசக்தி (Solar) மின்சாரத்திற்கு மாறுபவர்களுக்குப் பெரும் சலுகைகளைத் தவெக அறிவித்துள்ளது. வீடுகளில் சோலார் தகடுகளைப் பொருத்துபவர்களுக்கு ரூ.35,000 முதல் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பும் இதில் இடம்பெற்றுள்ளது.

விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கும் மின்சார விவகாரத்தில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கைத்தறி மற்றும் விசைத்தறி கூடங்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தின் அளவை உயர்த்துவதாகவும், சிறு குறு தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண முறையை எளிமைப்படுத்துவதாகவும் விஜய் உறுதியளித்துள்ளார். தமிழகத்தின் மின்சாரக் கட்டமைப்பை நவீனப்படுத்தி, தடையற்ற மின்சாரம் வழங்கத் தவெக முன்னுரிமை அளிக்கும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.