வெற்றியை நோக்கி தவெக...  வேட்பாளர்களை  பாதுகாக்க  தயாராகும் மாமல்லபுரம் விடுதி!  

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக 10 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 103 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் திசையில் முன்னேறி வருகிறது. இந்த அதிரடி மாற்றத்தால் உற்சாகமடைந்துள்ள அக்கட்சித் தலைமை, வெற்றி பெறும் வேட்பாளர்கள் மாற்று முகாமுக்குச் செல்வதைத் தடுக்க தற்போதே பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் குதிரை பேரத்தின் அடிப்படையில் தங்களது வேட்பாளர்களை இழுக்க முயற்சி செய்யலாம் என விஜய்க்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை முறியடிக்க வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் உடனடியாக பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும் என விஜய் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். தற்போது அதன் தொடர்ச்சியாக, மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியைத் தவெக நிர்வாகிகள் முழுமையாகத் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

வெற்றி பெறும் எம்.எல்.ஏ.,க்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்க அந்த விடுதியில் சுமார் 100 பேர் தங்கும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்களைச் சிதறாமல் ஒருங்கிணைத்து அந்த இடத்திற்கு அழைத்து வரும் முக்கியப் பொறுப்பை ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது. தமிழக அரசியலில் தவெக ஏற்படுத்தியுள்ள இந்த அதிரடித் திருப்பம் மற்றும் பாதுகாப்புக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.