சென்னையிலேயே தங்குங்க... தவெக எம்எல்ஏக்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (மே 5) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது கட்சி எம்எல்ஏக்களுடன் சென்னை பனையூர் அலுவலகத்தில் மிக முக்கியமான ஆலோசனையை நடத்தினார். ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக இருப்பதால், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், வெற்றி பெற்ற அனைத்து தவெக எம்எல்ஏக்களும் முறைப்படி பதவியேற்கும் வரை சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒரு தொங்கு சட்டசபை உருவாகியுள்ள நிலையில், குதிரை பேரம் அல்லது கட்சித் தாவல் போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போது அனைவரும் ஒருங்கிணைந்து இருக்கவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆட்சியைப் பிடிப்பதற்கான பெரும்பான்மையைத் திரட்ட காங்கிரஸ், பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக தரப்பு ரகசியப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ள நிலையில், எம்எல்ஏக்கள் அனைவரும் தலைமையின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். இதனால் தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னையில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிய அரசு அமைவது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் வரை இந்த 'சென்னை வாசம்' தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.