தனித்தொகுதிகளில் தவெக விஸ்வரூப வெற்றி... 46-ல் 23 இடங்களைக் கைப்பற்றி சாதனை !
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் உள்ள 46 தனித்தொகுதிகளில் பாதியளவு இடங்களை, அதாவது 23 தொகுதிகளைக் கைப்பற்றித் தவெக அசத்தியுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-விற்கு, தனித்தொகுதிகளில் கிடைத்த இந்த வெற்றி சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 44 பட்டியல் சமூகத்தினர் (S.C.) மற்றும் 2 பட்டியல் பழங்குடியினர் (S.T.) என மொத்தம் 46 தனித்தொகுதிகள் உள்ளன. இதில் பொன்னேரி, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், பெரியகுளம் உள்ளிட்ட 23 முக்கியத் தனித்தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர். திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட இந்தத் தொகுதிகளில் தவெக ஊடுருவி இருப்பது அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற கட்சிகளின் நிலவரப்படி, திமுக 10 தனித்தொகுதிகளையும், அதிமுக 9 தனித்தொகுதிகளையும் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தவெக-விற்கு கிடைத்துள்ள இந்த அமோக வரவேற்பு, தமிழக அரசியலில் ஒரு புதிய சமூக மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த அதிரடி வெற்றி திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.