இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு ...சொகுசு பேருந்தில் விடுதியில் தங்கியிருந்த தவெக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வருகை.!
தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது. ஆளும் கட்சி சார்பில் தீர்மானம் முன்மொழியப்பட்ட பின், முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உரையாற்றுவார்கள். பின்னர், சபாநாயகர் மேற்பார்வையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். எதிர்க்கட்சியினர் கோரினால், டிவிஷன் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, முடிவுகள் முறையாக அறிவிக்கப்படும்.
வாக்கெடுப்பு நடைபெறும் போது அவையின் கதவுகள் மூடப்பட்டு, மொத்தம் உள்ள 6 டிவிஷன்களில் எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நிற்பதன் மூலம் ஆதரவு மற்றும் எதிர்ப்பு வாக்குகள் எண்ணப்படும். அவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் மற்றும் கூடுதலாக ஒரு வாக்கு (50 சதவீதத்திற்கு மேல் 1) பெற்றால் மட்டுமே அரசு வெற்றி பெற்றதாகக் கருதப்படும். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு தோல்வியுற்றால், ஆளுநருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அரசு கலைக்கப்பட வாய்ப்புள்ளது.
வாக்கெடுப்பிற்காக மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த தவெக எம்.எல்.ஏ.க்கள், சொகுசு பேருந்துகளில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை சட்டசபைக்கு வருகை தந்தனர். தற்போதைய அரசியல் சூழலில், தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே தவெக அரசு தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என்பதால், இன்றைய தினம் தமிழக அரசியலில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.