தமிழ்நாடு அரசியலை புரட்டிப் போட்ட  4,649 வாக்குகள்... பரபரப்பு ஆய்வறிக்கை! 

 

தமிழக அரசியலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 இடங்களைக் கைப்பற்றி வியக்கத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆட்சியைப் பிடிக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காத சூழலில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது அரசியல் பயணத்தைத் வெற்றிகரமாகத் தொடங்கி உள்ளார்.

இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால், மிகச்சிறிய வாக்கு வித்தியாசத்தில் தவெக இழந்த தொகுதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தேர்தல் புள்ளிவிவரங்களின்படி, தவெக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த 10 தொகுதிகளில், கூடுதலாக 4,649 வாக்குகளைப் பெற்றிருந்தால், அக்கட்சி 118 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையைப் பெற்றிருக்கும். அந்த 10 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருந்தால், மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய அவசியம் தவெக-வுக்கு ஏற்பட்டிருக்காது.

தற்போது தமிழகத்தில் நிலவும் இந்த அதிகாரப் பகிர்வு மற்றும் கட்சிகளுக்கு இடையிலான புதிய அரசியல் உறவுகள் அனைத்தும், அந்த 4,649 வாக்குகள் என்கிற மிகச்சிறிய வித்தியாசத்தாலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை தவெக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தால், இன்றைய அரசியல் மாற்றங்களும், சூழல்களும் முற்றிலும் வேறாக இருந்திருக்கும் என்பதுதான் நிதர்சனம். எது எப்படியிருப்பினும், முதல் தேர்தலிலேயே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.