தவெக நிர்வாகி மூதாட்டியைத் தள்ளிவிட்டுக் கொலை செய்து நகைப்பறிப்பு... பரபரப்பு!  

 

மதுராந்தகம் அடுத்த கீழாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் சாமிநாதன். கூலி தொழிலாளியான இவரது மனைவி முத்தாலு என்ற 75 வயது மூதாட்டி, கடந்த 23ஆம் தேதி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் வீட்டில் வழுக்கி விழுந்துதான் இறந்துவிட்டார் என நினைத்து, அவரது உறவினர்கள் உடலை அடக்கம் செய்து விட்டனர். அதன் பின்பு அவரது 5 சவரன் செயின் மற்றும் காதில் இருந்த கம்மலைக் காணவில்லை என்று அவரது மகன்கள் மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த விசாரணையில், வீட்டின் அருகில் உள்ள மா மரத்தடியில் தவெக கிளை பொறுப்பாளரான வாசுதேவன் என்ற 45 வயது நபர் உள்ளிட்ட சிலருடன் முத்தாலு அமர்ந்திருப்பது வழக்கம் என்று தெரியவந்தது. சம்பவம் நடந்த நாள் முதல் வாசுதேவன் தலைமறைவாகி விட்டதால், காவல்துறையினர் தனிப்படை அமைத்து ஓசூரில் மறைந்திருந்த அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் மூதாட்டியிடம் இருந்து நகையைப் பறித்துக் கொண்டு அவரைக் கீழே தள்ளியதாகவும், இதனால் தலையில் காயம் ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாகவும் வாசுதேவன் ஒப்புக்கொண்டார்.

மேலும் இது வழுக்கி விழுந்து ஏற்பட்ட மரணம் என்று உறவினர்களை நம்ப வைப்பதற்காக, வீட்டின் தரையில் அவர் தண்ணீர் ஊற்றி நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து மேல்மருவத்தூர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கிராம பொதுமக்கள் முன்னிலையில், கடந்த வாரம் புதைக்கப்பட்ட மூதாட்டியின் உடலைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்தனர். நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியைக் கொலை செய்த வாசுதேவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.