தவெக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பேனர் கலாச்சாரத்திற்கு  144...   என்.ஆனந்த்  உத்தரவு!

 

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத அரசியல் பாதையை உருவாக்கவும் பல்வேறு   நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் (TRP Programs / Public Events) கட்-அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கும் கலாச்சாரத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு மிகக் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில், "நமது கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களின் தெளிவான வழிகாட்டுதலின்படி, தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறையும் ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, கட்-அவுட்டுகளோ அல்லது தோரணங்களோ வைக்கவே கூடாது. மக்கள் நலனே நமது முதன்மை இலக்கு என்பதால், இந்த விதியை அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்" என்று கறாராகக் குறிப்பிட்டுள்ளார்.

தலைவரின் உத்தரவை மீறி, தங்களது சுய விளம்பரத்திற்காகவோ அல்லது ஆர்வக்கோளாறிலோ பேனர்களை வைக்கும் நபர்கள் மீது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என்.ஆனந்த் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் பேனர் கலாச்சாரத்தால் கடந்த காலங்களில் பல்வேறு விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ள சூழலில், ஆளும் தவெக அரசின் இந்த   பொறுப்பான தடை உத்தரவு, தற்போது ஒட்டுமொத்தப் பொதுமக்களடையேயும், சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுச் சுடச்சுட விவாதிக்கப்பட்டு வருகிறது!