பெண்ணின் தலைமுடியை பிடித்து தாக்கும் தவெக பிரமுகர்... பகீர்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த அமரகுந்தியை சேர்ந்த விவசாயி அருணாச்சலம் என்பவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்தண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக வழித்தட பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் அருணாச்சலம் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது பாறைகள் உடைந்த துகள்கள் மற்றும் தூசி முத்தண்ணனின் வீட்டின் மேல் படிந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்தண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு வந்து அருணாச்சலம் மற்றும் அவரது மனைவி வசந்தாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இந்த மோதலில் காயமடைந்த இருதரப்பினரும் சிகிச்சைக்காக சேலம் மற்றும் ஓமலூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலின் போது முத்தண்ணன் தன்னை தாக்க வந்த பெண்ணின் தலைமுடியை கொத்தாகப் பிடித்துக்கொண்டு முகத்திலேயே கொடூரமாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முத்தண்ணனின் தந்தை பரந்தாமன் அதிமுக கிளை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் முத்தண்ணன் சமீப காலமாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட புகைப்படங்கள் வெளியான நிலையில் அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தாரமங்கலம் வடக்கு ஒன்றிய தவெக தலைமை விளக்கம் அளித்துள்ளது.