தவெக ஆட்சியை கவிழ்க்க மெகா குதிரை பேர சதி...  செந்தில் பாலாஜி மற்றும் தம்பிக்கு லுக் அவுட் நோட்டீஸ், இன்று ஆஜராக சம்மன்!

 

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களை வளைக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரம் தற்பொழுது மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தவெகவின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், சட்டப்பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக வாக்களிக்க 35 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகச் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த மெகா குதிரை பேர சதித் திட்டத்தின் பின்னணியில் செயல்பட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகிய இருவர் மீதும் போலீசார்   வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கின் விசாரணைக்காகச் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சொந்த வீட்டிற்கு நேரில் சென்று, அவரது பெற்றோரிடம் சம்மனை முறைப்படி ஒப்படைத்துள்ளனர். அந்தச் சம்மனின்படி, செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகிய இருவரும் இன்று (ஜூலை 6) நண்பகல் 12 மணி அளவில் சென்னை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் எவ்விதத்திலும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு சென்னை மாநகர போலீசார் அவர்கள் மீது அதிரடியாக லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பித்துள்ளனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இ-பி-டி-எஸ் (IPDS) நிறுவனத்தின் திருநாவுக்கரசு உட்படக் கைது செய்யப்பட்டுள்ள 8 நபர்களும் செந்தில் பாலாஜியின் நேரடி வழிகாட்டுதலின் படியே இந்த 180 கோடி ரூபாய் மதிப்பிலான ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். ஒருவேளை இன்று வழங்கப்பட்டுள்ள இறுதி சம்மனின் அடிப்படையில் செந்தில் பாலாஜியும் அவரது தம்பியும் போலீஸ் விசாரணையில் நேரில் ஆஜராகவில்லை என்றால், அவர்களை உடனடியாகக் கைது செய்வதற்குக் தனிப்படை போலீசார் அனைத்து ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளனர். இந்த அதிரடிப் போலீஸ் நகர்வுகள் மற்றும் அடுத்தகட்டக் கைது நடவடிக்கைகள் காரணமாகக் கரூர் மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது உச்சகட்டப் பரபரப்பு நிலவி வருகிறது.