காலை உணவுத் திட்டத்தின் பெயர்  மாற்றம்...தவெக அரசு  முக்கிய அறிவிப்பு!

 

பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தின் பெயரைத் தமிழக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. முந்தைய ஆட்சியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட 'முதல்வரின் காலை உணவுத் திட்டம்' இனி புதிய பெயரில் அழைக்கப்படும். இத்திட்டத்திற்குப் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனத் தவெக அரசு முறைப்படி பெயர் சூட்டியுள்ளது. கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரைக் கௌரவிக்கும் வகையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. கொள்கைத் தலைவரான தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதி முதல் இந்த விரிவாக்கம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் மேலும் 15 லட்சம் மாணவர்கள் பயனடைந்து பள்ளிகளிலேயே சுவையான காலை உணவை உண்ண முடியும்.

முன்னதாகப் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்து கல்விப் புரட்சி செய்தவர் காமராஜர். அவரைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தையும், கலைஞர் கருணாநிதி முட்டை வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தினர். அடுத்தகட்டமாக மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்த நிலையில், அதனை விஜய் மேலும் விரிவுபடுத்தியுள்ளார். மாநிலத்தில் மொத்தம் 34.36 லட்சம் மாணவர்களின் பசியைப் போக்கும் வகையில் இத்திட்டம் புதிய பெயருடன் சிறப்படைய உள்ளது.