தவெக அரசின் 100 நாட்கள் சாதனை... அனைத்து துறைகளுக்கும் பறந்த உத்தரவு!
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முசல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. திராவிட கட்சிகளின் அறுபது ஆண்டுகால தொடர் ஆட்சியை நிறைவுக்குக் கொண்டு வந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி தமிழக அரசியலில் மிக முக்கிய மைல்கல்லாக அமைந்தது. நிர்வாகத்தில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை முழுமையாக உறுதி செய்யும் வகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்று நூறு நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்துத் துறைகளும் இதுவரை செய்த சாதனைகளின் பட்டியலைத் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையின் மூலமாக பொதுமக்களுக்குக் கிடைத்த பயன்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்களைத் திரட்ட அரசு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாகப் பதிவுத்துறையில் முறைகேடுகளைத் முழுமையாகத் தடுக்கும் நோக்கில் வருகையில்லா ஆவணப்பதிவு முறை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்குத் தங்குதடையற்ற சேவைகளை வழங்குவதோடு மட்டுமின்றி லஞ்சத்தை ஒழிக்கவும் பல்வேறு அதிரடி முயற்சிகள் அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்துத் தயாரிக்கப்படும் இந்தச் சாதனை பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளன. இதன் மூலம் அரசின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த தெளிவான விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.