செங்கற் சூளையில் மிரட்டி பணம் கேட்ட தவெக நிர்வாகிக்கு மீண்டும் பதவி... ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

 

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தவெகவைச் சேர்ந்த ஒரு பிரிவினர் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கற் சூளை உரிமையாளரிடம் மாதம் 1 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட கட்சியின் முன்னாள் நிர்வாகி ஒருவருக்கு மீண்டும் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தவெக நிர்வாகி விஜயகுமார் என்பவர், செங்கல் சூளை உரிமையாளர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் கோரியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அண்மையில் கட்சியின் அடிப்படைப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு மீண்டும் கட்சிப் பொறுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் சிலர் இன்று திரண்டு வந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதன்மை நுழைவுவாயிலை முற்றுகையிட்டனர்.

கட்சி ரீதியான பதவி உயர்வு அல்லது ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான கோரிக்கைகளுக்குக் கட்சித் தலைமை அலுவலகத்தை நாடாமல், அரசு நிர்வாகப் பகுதியான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டது அங்குச் சலசலப்பை ஏற்படுத்தியது.

இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அழைத்து வரப்பட்ட பெண் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தாங்கள் எதற்காக இங்கு அழைத்து வரப்பட்டோம் என்ற விபரம் தெரியாமலேயே வந்ததாகத் தெரிவித்ததால் அங்குச் சற்றுத் தொய்வு ஏற்பட்டது.

அரசு அலுவலகப் பணிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கட்சி உள்கட்டமைப்பு விவகாரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் கொண்டு வந்ததால் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, உரிய அறிவுறுத்தல்களுக்குப் பின் கலைந்து செல்லுமாறு போராட்டக் குழுவினரைத் பாதுகாப்புப் படையினர் கேட்டுக் கொண்டனர்.