வாகா எல்லையில் சுதந்திர தின நிகழ்வில் ஒலித்த தவெக பிரச்சாரப் பாடல்!
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா - பாகிஸ்தான் வாகா எல்லையில் நடைபெற்ற கொடி இறக்கும் நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரப் பாடல் ஒலிக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினந்தோறும் மாலை நேரத்தில் வாகா எல்லையில் நடைபெறும் புகழ்பெற்ற 'பீட்டிங் ரிட்ரீட்' கொடி இறக்கும் நிகழ்வு, சுதந்திர தினத்தை முன்னிட்டு மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ராணுவ வீரர்களின் கம்பீரமான அணிவகுப்புக்கு இடையே, எதிர்பாராத விதமாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பிரச்சாரப் பாடலான 'தனி ஒருவன் எழுந்து வரான்' என்ற பாடல் சுமார் 11 வினாடிகளுக்கு ஒலிக்கப்பட்டது. தவெக பாடலைத் தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் வெளியான 'மருது' திரைப்படத்தின் தமிழ் பாடலும் அங்குள்ள ஸ்பீக்கர்களில் ஒலிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள வாகா எல்லையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வின் போது தமிழ்நாட்டின் அரசியல் கட்சிப் பாடலும் சினிமா பாடலும் ஒலிபரப்பப்பட்ட வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை இணையவாசிகள் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.