கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டிப் பொருட்களை நொறுக்கிய தவெக நிர்வாகி கைது!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கல்குவாரிக்குச் சென்று பணம் கேட்டு அரிவாளால் தாக்க முயன்ற தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த நிர்வாகி மற்றும் அவரது சகோதரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய தவெக செயலாளராக இருக்கும் பாலமுருகன் என்பவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்குவாரிக்குச் சென்றுள்ளார். கல்குவாரி உரிமையாளரிடம் சென்று தனக்குப் பணம் தர வேண்டும் எனக்கூறி பாலமுருகன் அரிவாளைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
கல்குவாரி உரிமையாளர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த பாலமுருகன், அங்கிருந்த அலுவலக அறைக்குள் புகுந்துள்ளார்: பணம் கிடைக்காத ஆத்திரத்தில், குவாரி அலுவலக அறையிலிருந்த கணினிகள், தொலைக்காட்சி மற்றும் பிற தளவாடப் பொருட்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்துக் கல்குவாரி உரிமையாளர் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்:
கல்குவாரி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக முயன்ற தவெக ஒன்றிய செயலாளர் பாலமுருகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.