வாக்கு எண்ணும் மையத்தில் ’ஜனநாயகன்’ படம் பார்த்த தவெக நிர்வாகி கைது!

 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த யுவராஜ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அந்த மையத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு அறையில் பணியில் இருந்தபோது, தனது மடிக்கணினியில் 'ஜனநாயகன்' திரைப்படத்தைச் சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார். படம் பார்த்ததை அப்படியே புகைப்படம் எடுத்து கடந்த 23 ஆம் தேதி இரவு தனது சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்தச் செயல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கருதப்பட்டதால் அதிகாரிகள் அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் பனங்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய யுவராஜ், தற்காலிக அடையாள அட்டையைப் பெற்று கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் தனது அடையாள அட்டையையும் முன்னரே சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறைக்கு மிக அருகிலேயே இந்த விதிமீறல் நடந்துள்ளது அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாநகராட்சி தகவல் தொழில்நுட்ப அதிகாரி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேர்தல் தொடர்பான தவறான தகவல்களைப் பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், யுவராஜை இன்று அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். வாக்கு எண்ணும் மையங்களில் மிகவும் ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய தகவல்களைச் சமூக வலைதளங்களில் கசியவிட்டது பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. 5 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தவெக நிர்வாகியான இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.