நெகிழ்ச்சி... இரட்டைச் சகோதரிகளைக் கரம்பிடித்த இரட்டைச் சகோதரர்கள்.. திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்களும் இரட்டையர்கள்!
கேரள மாநிலம் கோட்டயம் அருகே இரட்டைச் சகோதரிகள், இரட்டைச் சகோதரர்களைத் திருமணம் செய்து கொண்ட வினோத நிகழ்வு உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த குஞ்சுமோன் தாமஸ் - ஜோமோள் தம்பதியின் இரட்டை மகன்களான அகில் (29) மற்றும் நிகில் (29). இருவரும் சரக்கு வணிகக் கப்பலில் பணியாற்றி வருகின்றனர். அதே சமயம் பத்தனம்திட்டா குளத்தூரைச் சேர்ந்த டோமிச்சன் - மேரி குட்டி தம்பதியின் இரட்டை மகள்களான மாகி மேரி (25) மற்றும் மரியா மேரி (25). இருவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பொறியாளர்களாக உள்ளனர். இதில் அகில், மாகி மேரியையும்; நிகில், மரியா மேரியையும் கரம் பிடித்தனர்.
சிறுவயதில் இருந்தே இரட்டையர்களையே திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருந்த மணப்பெண்கள், அதற்கேற்ப அமைந்த மணமகன்களைத் தேர்வு செய்தனர். மேலும், இத்திருமணத்தைச் சிறப்பிக்கும் வகையில்: திருமணத்தைச் நடத்தி வைத்த பாதிரியார்கள் ஆன்றோ மற்றும் அஜோ ஆகியோரும் இரட்டையர்கள். திருப்பலியின் போது உதவி புரிந்த பீடச் சிறுவர்கள் ஜெரோன் ஜேம்ஸ் மற்றும் ஜோகன் ஜேம்ஸ் ஆகியோரும் இரட்டையர்கள்.
சங்கனாச்சேரியில் உள்ள மெட்ரோபோலிட்டன் ஆலயத்தில் நடைபெற்ற இந்த அபூர்வ திருமணத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.