பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!

 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான வேம்புலி என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் தவெகவினர் தொடர்பு கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், தவெக தலைமை இந்த அதிரடி ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

வேம்புலி மீதான இந்த ஒழுங்கு நடவடிக்கை குறித்துச் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், தவெகவின் முக்கிய நிர்வாகியுமான இ.சி.ஆர். பி. சரவணன் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பாலியல் சீண்டல் புகாருக்குள்ளான வேம்புலி கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாகவும், இனிமேல் அவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேம்புலி, இனிவரும் காலங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர், கட்சியின் கொடி, சின்னம் மற்றும் பழைய நிர்வாகப் பொறுப்புகள் எதையும் எந்தவொரு காரணத்திற்காகவும் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளார். தவெகவின் அடையாளங்களைப் பயன்படுத்தி அவர் ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதற்கு அவரே முழுப் பொறுப்பாவார் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டுக் குற்றவாளியைக் கைது செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, தவெகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவும் "தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராகக் குற்றமிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது" எனத் தெரிவித்திருந்தது.