பொக்லைன் ஆபரேட்டரைத் தாக்கிய தவெக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்!
செங்கல்பட்டு அருகே பணம் கேட்டு பொக்லைன் ஆபரேட்டரைத் தாக்கிய தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சில மணி நேரங்களிலேயே தவெக தலைமை இந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் அடுத்த பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் அழகுதுரை என்ற தொழிலாளி பொக்லைன் ஆபரேட்டராகப் பணிபுரிந்து வருகிறார்.
கட்டிடம் இடிக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த தவெக உள்ளூர் பிரமுகரான ஜெய்கிருஷ்ணன் என்பவர், பொக்லைன் ஆபரேட்டர் அழகுதுரையிடம் பணி செய்ய வேண்டுமானால் தமக்கு குறிப்பிட்ட தொகையைப் பணமாகத் தர வேண்டும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அழகுதுரை மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த ஜெய்கிருஷ்ணன் அந்தத் தொழிலாளியைத் தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தொழிலாளி அழகுதுரையைத் தவெக பிரமுகர் ஜெய்கிருஷ்ணன் அராஜகமான முறையில் தாக்கும் காட்சிகள், அங்குள்ள சிலரால் மொபைல் போனில் வீடியோ எடுக்கப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டது:
இந்த வீடியோ முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் வேகத்தில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியிலும் இணையவாசிகள் மத்தியிலும் தவெக-விற்கு எதிராகப் பலத்த கண்டனங்களை எழுப்பியது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட பெருங்களத்தூர் ஜெய்கிருஷ்ணனை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்குவதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று, இன்னும் சில வாரங்களில் தங்களது முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடரைச் சந்திக்கத் தயாராகி வரும் வேளையில், தங்களது கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நிர்வாகிகள் மீது தலைமை தயவுதாட்சண்யமின்றி உடனுக்குடன் எடுத்து வரும் இத்தகைய அதிரடி ஒழுங்கு நடவடிக்கைகள் உள்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.