92,612 டன் LPG எரிவாயுவுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வரும் 2 ராட்சத கப்பல்கள் - பிரதமர் மோடி பெருமிதம்!

 

ஈரான் - இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு கடல் பகுதியில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாரதத்தின் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க 'ஜக் வசந்த்' மற்றும் 'பைன் கேஸ்' ஆகிய இரண்டு இந்தியக் கப்பல்கள் வெற்றிகரமாக ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளன. இந்த இரண்டு கப்பல்களும் இணைந்து மொத்தம் 92,612 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவைச் சுமந்து வருகின்றன. இது இந்தியாவின் ஒரு நாள் முழுமையான சமையல் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவாகும். இந்தக் கப்பல்கள் ஈரானின் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் (Larak and Qeshm islands) மிக நெருக்கமாகப் பயணித்து, தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னரே ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளன.

'பைன் கேஸ்' கப்பலில் 33 இந்தியர்களும், 'ஜக் வசந்த்' கப்பலில் 27 இந்தியர்களும் என மொத்தம் 60 மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர். இந்தக் கப்பல்கள் வரும் மார்ச் 26 முதல் 28-க்குள் குஜராத்தின் முந்த்ரா அல்லது கண்ட்லா துறைமுகத்தைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாநிலங்களவையில் மத்திய கிழக்கு போர் சூழல் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். "உலகமே போர் மேகங்களால் சூழப்பட்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலிலும், இந்தியாவின் எரிசக்தித் தேவையில் எவ்விதத் தடையும் ஏற்படாமல் இருக்கத் தூதரக ரீதியாகத் தொடர்ந்து பேசி வருகிறோம். ஹார்முஸ் நீரிணை போன்ற முக்கியமான கடல் பகுதிகளில் நமது கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதை உறுதி செய்ய ஈரான் உள்ளிட்ட அனைத்து வளைகுடா நாடுகளுடனும் மத்திய அரசு நேரடித் தொடர்பில் உள்ளது."

நமது கப்பல்கள் பாதுகாப்பாக வர ஈரானிய கடற்படை வழிகாட்டுதல்களை வழங்கியிருப்பது இந்தியாவின் வலுவான வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. "கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பெட்ரோலிய இருப்புத் திறனை 53 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளோம். எந்தவொரு நெருக்கடியையும் சந்திக்கத் தயாராக உள்ளோம்" என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

பிப்ரவரி 28-ல் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, சுமார் 22 இந்தியக் கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் சிக்கியிருந்தன. ஏற்கனவே 'ஷிவாலிக்' மற்றும் 'நந்தா தேவி' ஆகிய கப்பல்கள் தாயகம் திரும்பிய நிலையில், தற்போது அடுத்த இரண்டு கப்பல்கள் வெற்றிகரமாகத் தப்பி வந்துள்ளன.