இந்திய வாகன உற்பத்தியில் அசுர வளர்ச்சி - 2027ல் டூ வீலர் உற்பத்தி 2.9 கோடியைத் தாண்டும்!
இந்தியாவின் இருசக்கர வாகனத் துறை வரும் 2027-ஆம் நிதியாண்டில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டும் என்று கிரிசில் (CRISIL) மதிப்பீட்டு நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை வரும் 2027-ஆம் நிதியாண்டில் 7-9 சதவீதம் வளர்ச்சியைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த உற்பத்தி எண்ணிக்கை 2.9 கோடி வாகனங்களைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
350 சிசி-க்கும் குறைவான திறன் கொண்ட வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், வாகனங்களின் விலை குறைந்து மக்களிடையே வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான ஏற்றுமதி சுமார் 21-23 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த உற்பத்தி உயர்வுக்கு வலுசேர்க்கும்.
நகர்ப்புற பயன்பாடு மற்றும் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பால், ஸ்கூட்டர் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை (Double-digit growth) எட்டும் என்று கூறப்படுகிறது. 150-350 சிசி திறன் கொண்ட உயர்தர மோட்டார் சைக்கிள்களுக்கான தேவை இளைஞர்களிடையே அதிகரித்து வருவதால், நிறுவனங்களின் வருவாய் 10-12 சதவீதம் வரை உயரும்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை 2027-ல் 16-18 சதவீதம் வரை வளரும் எனத் தெரிகிறது. குறிப்பாக மின்சார ஸ்கூட்டர்கள் இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்த அதிரடி வளர்ச்சியைக் கையாள முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் (OEMs) சுமார் 6,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன. இது வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.