ஐக்கிய அரபு அமீரகத்தில் கோர விபத்து… தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்; இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி!

 

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய பயங்கர விபத்தில் இந்தியர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷேக் கலீஃபா பின் சயீத் சாலையில், புஜைரா நகரின் நுழைவுப் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவுக்கு முன்பு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனம் மீது மோதியுள்ளது. பின்னர் கவிழ்ந்த லாரி, போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையில் நின்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மீதும் மோதியது.

இந்த மோதலைத் தொடர்ந்து லாரியில் தீப்பிடித்தது. அந்தத் தீ அருகிலிருந்த வாகனங்களுக்கும் பரவியதால் உயிரிழப்புகள் அதிகரித்தன. மொத்தம் 18 கார்கள் மற்றும் 5 லாரிகள் என 23 வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்த மீட்புக் குழுவினர் தீயை அணைத்து காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். காயமடைந்த 30 பேரில் 15 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 15 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் இந்தியர்களும் அடங்குவதாக துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் கூறியுள்ளது. உயிரிழந்த சிலரின் அடையாளங்களைக் கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.