அமீரக அணுமின் நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்... இந்தியா பகிரங்க கண்டனம்!

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள அல் தப்ரா பகுதியில் புகழ்பெற்ற பரக்கா அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், சர்வதேச விதிகளுக்குப் புறம்பாக இந்த அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து நேற்று மர்ம நபர்களால் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் திடீர் தாக்குதல் காரணமாக அணுமின் நிலைய வளாகத்தில் இருந்த மின்சார உற்பத்தி ஜெனரேட்டர் ஒன்று பயங்கரத் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் கொழுந்துவிட்டு எரிந்த தீயை உடனடியாக அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக இந்தத் விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும், அங்கு கதிர்வீச்சு அபாயம் எதுவும் இல்லை என்றும் அந்நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு இடையே அரங்கேறியுள்ள இந்தத் தாக்குதல் சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.

இந்த அணுமின் நிலையத் தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய அரசு தற்பொழுது தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரக்கா அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதல் மிகுந்த கவலையளிக்கிறது என்றும், இத்தகைய வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் உடனடியாக மோதல்களைத் தவிர்த்து அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றும் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.