உடன்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்!

 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைந்துள்ள புதிய அனல்மின் நிலையத்தில், பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பிரிவு ஒன்றில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதலாவது அலகில் வழக்கமான தொழில்நுட்பப் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அந்த அலகில் நடைபெற்று வந்த 660 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சீரமைப்புப் பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், பணிகள் நிறைவடைந்தவுடன் உடனே மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அனல்மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் மற்றும் கூலிங் டவர் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2-வது அலகில் வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் பல்வேறு தொழில்நுட்பச் சோதனை ஓட்டங்கள் தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.