குழந்தைக்கு உதயசூரியன் பெயர் வைத்த உதயநிதி.. திமுகவினர் உற்சாகம்! 

 

 

 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜாவை ஆதரித்துத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

விருகம்பாக்கம் பகுதியில் திறந்த வேனில் நின்றபடி உதயநிதி ஸ்டாலின் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு தம்பதியினர், தனது குழந்தைக்கு அவர் பெயர் சூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.  இதைக் கேட்ட உதயநிதி, உரையைச் சற்று நிறுத்திவிட்டு அக்குழந்தையைப் கைகளில் வாங்கினார்.  

"இது ஆண் குழந்தையா?" எனக் கேட்ட உதயநிதி, அது ஆண் குழந்தை என்று தெரிந்ததும், சற்றும் யோசிக்காமல் அக்கட்சி சின்னமான 'உதய சூரியன்' என்ற பெயரைச் சூட்டினார்.

விருகம்பாக்கம் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற பிரபாகர் ராஜா, இந்த முறையும் உதயநிதியின் இந்தச் சூறாவளிப் பிரச்சாரத்தால் தனது வெற்றி வாய்ப்பு மேலும் பிரகாசமாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் வேட்பாளரின் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோதே, கட்சியின் சின்னமான 'உதய சூரியன்' என்ற பெயரை அக்குழந்தைக்கு அவர் சூட்டியது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் கரவொலியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. அக்குழந்தையின் பெற்றோரும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.