"தைரியம் இருந்தால் எந்தக் கட்சி என்று குறிப்பிடுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி  சவால்!

 

சட்டமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'பார்ட்டி ஃபண்ட்' மற்றும் ஊழல் புகார்கள் குறித்துப் பொத்தாம் பொதுவாகப் பேசி வரும் முதலமைச்சர் விஜய்க்குத் திறந்தவெளிச் சவால் விடுத்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவையில் முன்வைப்பதைத் தவெக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். முதலமைச்சரின் உரையைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து இந்தச் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "சட்டமன்றத்திற்குள் முதலமைச்சர் விஜய் எழுந்து நின்று 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் கடந்த காலங்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டு வருகிறது என்று ஆவேசமாகப் பேசுகிறார். ஆனால், சபைக்கு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்திக்கும் அவரோட மின்சாரத்துறை அமைச்சர், முதலமைச்சர் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்று மழுப்பலாக ஒரு விளக்கத்தைக் கொடுக்கிறார். இவர்களின் பேச்சிலேயே இவ்வளவு முரண்பாடுகள் இருப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் முதலமைச்சருக்கும், இந்த அரசுக்கும் சவால் விடுகிறேன். உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், எந்தக் கட்சி ஊழல் செய்தது, எந்தக் கட்சியின் பார்ட்டி ஃபண்ட் மீட்கப்படுகிறது என்று நேடியாகக் கட்சியின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுங்கள். அதைப்பற்றி அவையிலும் சரி, மக்கள் மன்றத்திலும் சரி, நேருக்கு நேராக விவாதிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

சட்டமன்றப் பேரவை என்பது மக்கள் பிரதிநிதிகள் விவாதிக்கும் தளம் என்றும், அங்கு அரசியல் மேடைப் பேச்சுகளைப் போலப் பொத்தாம் பொதுவாகப் பேசுவது முறையல்ல என்றும் உதயநிதி ஸ்டாலின் சாடினார். "முதலமைச்சர் விஜய் அவர்கள் எதைப்பற்றிப் பேசினாலும், அதற்குரிய தகுந்த ஆதாரங்களோடு பேச வேண்டும்.

ஆதாரங்கள் இன்றி எதிர்க்கட்சிகள் மீது சேற்றை வாரி இறைக்கும் போக்கைக் கைவிட வேண்டும். எந்தவொரு விசாரணைக்கும், வழக்குகளுக்கும் அஞ்சும் கட்சி திமுக அல்ல" என்று அவர் மிகத் திட்டவட்டமாகத் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் இந்த நேரடி அரசியல் சவால், தவெக மற்றும் திமுக இடையேயான அரசியல் மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.