இன்று சேப்பாக்கத்தில் உதயநிதி; திருச்சியில் விஜய்... நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்யும் பிரபலங்கள்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று முக்கியத் தலைவர்கள் பலரும் களம் காண்கின்றனர்.

திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழகத் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மீண்டும் தனது சொந்தத் தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று காலை 11 மணி முதல் 12 மணிக்குள் சேப்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். மனுத் தாக்கலுக்குப் பிறகு, தொகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தான் போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இன்று மதியம் 12 மணி அளவில். திருச்சியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்.

மனுத் தாக்கலை முன்னிட்டுத் திருச்சியில் தவெக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர். இதன்பின் மதியம் 12:30 மணியளவில் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே தனது பிரம்மாண்ட பரப்புரையைத் தொடங்குகிறார்.

ஆளுங்கட்சியின் முக்கிய முகம் ஒருபுறம், புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள திரையுலக நட்சத்திரம் மறுபுறம் என இன்று இருவருமே வேட்புமனு தாக்கல் செய்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருமே மனுத் தாக்கல் செய்த கையோடு அந்தந்த மாவட்டங்களில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.