“உதயநிதியே அரசு பங்களாவில் தான் வசித்து வருகிறார்” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில்!

 

சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வழங்கும் திட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருக்குப் பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கருத்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள கார்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டாம்" எனத் திட்டவட்டமாக அறிவித்தார்.

முதலமைச்சரின் அறிவிப்பு பொதுவானது என்றும், அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்டாயமாகக் கார் வழங்கப்படவில்லை, தேவைப்படும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெளிவுபடுத்தியுள்ளார்.

திமுகவின் எதிர்ப்பிற்குப் பதிலளித்த அவர், "எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கூட தற்போது அரசு வழங்கிய பங்களாவில் தான் வசித்து வருகிறார்; இதற்கான கோரிக்கை கடிதத்தை அவரே என்னிடம் தான் கொடுத்தார்" என்று குறிப்பிட்டுப் பதிலடி கொடுத்துள்ளார்.