10 மணிநேர அலைக்கழிப்புக்குப் பின் உதயநிதி விடுவிப்பு.. கொட்டும் மழையில் குவிந்த தொண்டர்கள்... செங்கிப்பட்டியில் நடந்தது என்ன?!

 

சுமார் 10 மணி நேரக் காவல் அலைக்கழிப்பு மற்றும் விசாரணைக்குப் பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து காவல் நிலைய ஜாமீனில்  விடுவிக்கப்பட்டார்.

தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைத் தவிர்க்கும் பொருட்டு உதயநிதியைத் தஞ்சைக்கு அழைத்துச் செல்லாமல் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

"வழக்குப் பதியப்பட்ட காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் வேறு இடத்திற்கு அழைத்து வந்த காரணம் என்ன?" எனக் கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், ஆரம்பத்தில் வாகனத்தை விட்டு இறங்க மறுத்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பின்படியே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறிய உதயநிதி, நீண்ட நேர இழுபறிக்குப் பிறகு வேனில் இருந்து இறங்கித் தொண்டர்களை நோக்கிப் புன்னகையுடனும் கம்பீரமாகவும் கையசைத்துவிட்டு செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் சென்றார். செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் முன்னிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி உதயநிதி ஸ்டாலினைக் காவல்துறையினர் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். விடுதலையான உதயநிதி ஸ்டாலின் தனது காரின் கூரையைத் திறந்து நின்றபடி திமுக தொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் செங்கிப்பட்டி காவல் நிலையம் முன் திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.