ஒரே மேடையில் உதயநிதி - சீமான் சந்திப்பு - அரசியல் முரண்பாடுகளைத் தாண்டிய நாகரிகம்!
தமிழக அரசியல் களம் தவெக அரசுக்கு எதிரான நகர்வுகளால் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நேருக்கு நேர் சந்தித்துக் கட்டியணைத்து நலம் விசாரித்துக் கொண்ட அரசியல் நாகரிக நிகழ்வு சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே மேடையில், "தற்போதைய தவெக அரசு தமிழ்நாட்டின் பேரழிவு காலம்" என்று உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார்.
திமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான துறைமுகம் காஜாவின் இல்லத் திருமண விழா இன்று சென்னை திருவேற்காட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் மற்றும் சீமான் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேடையில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது, பொதுக்கூட்ட அரசியல் முரண்பாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, நெகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் கட்டியணைத்துத் தங்களது அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
சீமானைப் பார்த்தவுடன் அவரது கைகளைப் பற்றிய உதயநிதி ஸ்டாலின், அவரை மேடையில் அமருமாறு அன்போடு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்த சோபாவில் இருவரும் அருகருகே அமர்ந்து, சிரித்துப் பேசியபடி சில நிமிடங்கள் சுமுகமாக நலம் விசாரித்துக் கொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் சீமானும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், தற்போது உதயநிதியுடனான இந்தச் சந்திப்புப் படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மணமக்களை வாழ்த்தி மேடையில் உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், தவெக அரசு குறித்தும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்:
"இஸ்லாமிய பெருமக்களுக்கும், நமது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையில் இருக்கும் தொப்புள்கொடி உறவை இந்தத் தமிழ்நாட்டில் யாராலும் பிரிக்க முடியாது. மாற்றுத் தரப்பினர் என்னதான் அவதூறுகளைப் பரப்பினாலும், சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் உண்மையான காவல் அரணாகத் திமுக மட்டுமே நிற்கும்." தொடர்ந்து தவெக அரசை மிகக் காரசாரமாக விமர்சித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், அக்கட்சியின் ஐடி விங்கின் விமர்சனங்களுக்கும் மறைமுகமாகப் பதிலடி கொடுத்தார்:
"கழகத்தில் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு, சில பேருக்குச் சொகுசு சோபா வந்தவுடன் திமுகவை விட்டுவிட்டு மாற்று முகாமிற்கு ஓடிவிட்டனர். இன்று தமிழ்நாட்டில் என்ன அவலங்கள் நடந்தாலும், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாத ஒரு சுயநல அரசாகவே தற்போதைய தவெக அரசு இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பேரழிவில் இருந்து, தமிழ்நாட்டையும் அதன் உரிமைகளையும் திமுகவும், மு.க.ஸ்டாலினும் தங்களது மக்கள் போராட்டங்கள் மூலம் நிச்சயம் மீட்டெடுப்பார்கள்" என்று உறுதியளித்துப் பேசினார்.
திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய இரு துருவத் தலைவர்கள் காட்டிய அரசியல் நாகரிகம் ஒருபுறம் பாராட்டுகளைப் பெற்றாலும், தவெக அரசுக்கு எதிராகத் திமுக தனது அரசியல் தாக்குதலைப் பல மடங்கு தீவிரப்படுத்தியிருப்பதை இந்த மேடைப் பேச்சு தெளிவுபடுத்தியுள்ளது.