"ஒவ்வொரு அமைச்சரும் மாட்டப்போகிறார்கள்" - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
தவெக ஆட்சியில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் விரைவில் சிக்குவார்கள் என்றும், அவர்கள் செய்த தவறுகள் வெளிவரும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக பேசினார். இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி, "பொதுவாகச் சீட்டுக்கட்டில் ஒரு ஜோக்கர்தான் இருக்கும், ஆனால் இந்த ஆட்சியில் 52 ஜோக்கர்கள் இருக்கிறார்கள்" எனக் கிண்டலாக விமர்சித்தார்.
தவெக ஆட்சியில் உள்ள எந்தவொரு அமைச்சரையோ அல்லது எம்.எல்.ஏவையோ மக்களுக்கு நேரடியாகத் தெரியாது என்று கூறிய அவர், "பிளாக்கில் லாட்டரி விற்ற அமைச்சர், டவுசர் சங்கி அமைச்சர், பவுடர் போடும் அமைச்சர்" என்று குறிப்பிட்டால்தான் மக்களுக்கு அடையாளம் தெரியவரும் நிலை உள்ளதாகச் சாடினார்.
கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்களுக்கான சிறப்புத் திட்டங்களின் பெயர்களை மாற்றுவதைத் தவிர, இந்த தவெக அரசு புதியதாக எந்தவொரு சாதனையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.
தவெக அரசின் தவறான செயல்பாடுகள் மற்றும் ஊழல்கள் காரணமாக, இந்த ஆட்சியில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் வரிசையாக மாட்டப்போகிறார்கள் என்று அவர் தனது பேச்சில் எச்சரித்துள்ளார்.