"தமிழ்நாடு தாங்காது CM Sir" - முதலமைச்சர் விஜய்யை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
கடலூர் இளம்பெண் கொலை விவகாரத்தை அடுத்துத் தமிழக சட்டம் ஒழுங்குப் பிரச்சினை தொடர்பாகப் புதிய தவெக அரசுக்கு எதிராகத் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தற்பொழுது அக்கட்சி அறிவித்த 'சிங்கப்பெண்கள் அதிரடி படை' திட்ட விழா ரத்து செய்யப்பட்டதை முன்வைத்து முதலமைச்சர் விஜய்யை மேலும் காட்டமாக விமரிச்த்துள்ளார்.
"நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கைக் காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir" என்று உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் நேரடியாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தவெக அரசு, காவல் துறையில் 'சிங்கப்பெண்கள் அதிரடி படை' என்ற புதிய பிரிவை உருவாக்குவதாக அறிவித்திருந்தது. இந்தச் சிறப்புப் படையின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழா இன்று நடைபெறவிருந்த சூழலில், சில நிர்வாகக் காரணங்களால் கடைசி நேரத்தில் இந்த விழா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகத் தவெக அரசு அறிவித்தது.
இந்த விழா ரத்தைத் தான் திமுக தரப்பு கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க பிரம்மாண்டமா அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல திடீர்னு ரத்து செஞ்சு இருக்கீங்க" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசின் நிர்வாகக் குளறுபடிகளை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், "சிங்கப்பெண் படைனு வெறும் பேரையும், அவங்களோட Uniform-ஐயும் மாத்துறது மட்டும்தான் நீங்க சொன்ன அந்த மாற்றமா CM Sir? இல்ல, மாநிலத்துல சட்டம் ஒழுங்கை எப்படி நிலைநாட்டணும்னு தெரிஞ்சுக்கிறதுக்கு உங்களுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் வேணுமா?. நீங்க பொறுமையா டைம் எடுத்து, எல்லாத்தையும் கத்துக்கிட்டு வந்து இங்க சட்டம் ஒழுங்கைக் காப்பாத்துற வரைக்கும், தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் இந்தத் தொடர் குற்றங்களைத் தாங்க மாட்டார்கள்" என்று தனது பதிவில் மிகக் காட்டமாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக புதிய அமைச்சரவையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் முக்கியத் தலைவரான உதயநிதி ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யை நோக்கி "CM Sir" என அழைத்து, "தமிழ்நாடு தாங்காது" எனத் தொடர்ச்சியாக அடுக்கி வரும் நேரடி அரசியல் குற்றச்சாட்டுகள் தவெக மற்றும் திமுக விவாத மேடைகளில் தற்பொழுது பெரும் நெருப்பைக் கொளுத்திப் போட்டுள்ளது.