"பாஜகவைக் கண்டு அஞ்சும் முதலமைச்சர்" - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் காவல்துறையின் செயல்பாடு குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தவெக அரசை விமர்சிப்பவர்கள் மீது உடனடியாகக் கைது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, முதலமைச்சரை நேரடியாக விமர்சிக்கும் பாஜக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஏன் புகார்கூட அளிக்கப்படவில்லை என்றும் உதயநிதி கேள்வி எழுப்பினார். பாஜக அடித்தாலும் அதை வெளியே சொல்லக் கூடாது என்ற உத்தியைக் கடைப்பிடிப்பதன் மூலம் முதல்வர் பாஜகவைக் கண்டு அஞ்சுவது வெளிப்படுவதாக அவர் சாடினார்.
தவெக அரசு பொறுப்பேற்றுள்ள 116 நாட்களில் மாநிலம் முழுவதும் 550 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 10 சாதிய ஆணவப்படுகொலைகள் மற்றும் 8 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளுக்கு வேண்டுமானால் 4 மாதங்கள் என்பது பொருந்தலாமே தவிர, சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைக்கு இதைக் காரணமாகச் சொல்ல முடியாது என்றார்.
குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை, அரசை விமர்சிக்கும் Gen Z இளைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் முனைப்பைக் குற்றங்களைத் தடுப்பதில் காட்டுவதில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
ரீல்ஸ் கன்டென்ட், ரோல் கேமரா, ஆக்ஷன் மற்றும் குட்டிக் கதைகளைக் கூறித் தப்பிக்காமல், மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும், இன்னமும் தாங்கள் எதிர்க்கட்சியில் இருப்பதாக நினைத்துக்கொள்ளாமல் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.