“திமுக சாதனைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு” - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

 

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் ஆற்றிய உரை குறித்து, திமுக முதன்மைச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின் சாதனைகளைத் தற்போதைய 'சோஃபா மாடல் அரசு' தன் சொந்தச் சாதனைகளைப் போலக் காட்டி ஸ்டிக்கர் ஒட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "தேர்தல் பிரச்சாரக் காலங்களில் தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்துவிட்டது போலவும், வரலாறு காணாத கடனில் தத்தளிப்பதாகவும் பொய்களைக் கொண்டு திட்டமிட்டுச் சித்தரித்த இன்றைய முதலமைச்சர் விஜய், தற்போது டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்துவிட்டு வந்திருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பெருமையுடன் குறிப்பிட்ட அத்தனை அம்சங்களும் முந்தைய திமுக ஆட்சியில் உழைத்து உருவாக்கப்பட்டவை என்று உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-வது பெரிய பொருளாதார மாநிலமாகத் திகழ்வது, பெண்களுக்கான உயர்கல்வி உறுதித் திட்டங்கள், மகளிர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு எனப் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி ஆகியவை முழுக்க முழுக்க நமது கழக அரசின் கடின உழைப்பால் சாத்தியமானவை. ஆனால், பதவியேற்றது முதல் எவ்வித ஆக்கப்பூர்வமான பணிகளையும் செய்யாமல், ஓய்வெடுக்கும் 'சோஃபா மாடல் அரசு' நமது சாதனைகள் மீது முழுக்க முழுக்கத் தன் சொந்த ஸ்டிக்கரை ஒட்டிப் பெருமை தேடிக்கொள்கிறது" என்று அவர் விமர்சித்துள்ளார்.

மாநிலத்தின் உண்மையான வளர்ச்சியைப் புரிந்துகொள்ளாமல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வரும் முதலமைச்சரின் இந்தச் செயல்பாடு, அவர்களின் வெற்று அரசியல் விளம்பரத்தையே காட்டுவதாக உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் பதிலடி கொடுத்துள்ளார்.