உக்ரைனில் பள்ளி மீது ரஷ்யா டிரோன், ஏவுகணை தாக்குதல்; 31 பேர் பலி... அதிர்ச்சி வீடியோ!

 

 

உக்ரைனின் ஜாபோரிஜியா பகுதியில் பள்ளி ஒன்றில் உதவி கோரி கூடியிருந்த பொதுமக்கள் மீது ரஷ்யப் படைகள் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 4 காவல்துறையினரும், 2 மீட்புப் பணியாளர்களும் அடங்குவர். மேலும் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதலால் பள்ளிக் கட்டிடம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், 45-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் சூழலில், பொதுமக்கள் உதவி கோரி கூடியிருந்த இடத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரே உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.