1587 வது நாளாக தொடரும் போர்... உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்... 12  பேர் பரிதாப பலி!

 

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் டினிப்ரோ, சப்ரோசினியா மற்றும் சுமி ஆகிய முக்கிய நகரங்கள் பெரும் சேதமடைந்தன. இதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் மொத்தம் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவிகளுடன் உக்ரைன் ராணுவம் ரஷியாவிற்கு எதிராகத் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையேயான போர் 1587 வது நாளாக இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் எல்லையோரப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை முழுமையாக இழந்து, பாதுகாப்பான இடங்களைத் தேடித் தஞ்சம் புகுந்து அலைந்து வருகின்றனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த நீண்டகாலப் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சுமுகமான உடன்பாடு எட்டப்படாததால் சமரசம் செய்யும் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இரு தரப்பிலும் அமைதி பேச்சுவார்த்தைக்கு வழி பிறக்காததால் இந்தத் துயரமான போர் இன்னும் தணியாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.